பொறுப்பான நுகர்வு (ரெஸ்பான்ஸிபிள் கன்ஸம்ப்ஷன்) இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் நீடித்திருக்கும் நாகரிகத்தை (ஸஸ்டைனபிள் ஃபேஷன்) ஏற்படுத்தவும் முக்கியமாகும். நாம் நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பொறுப்போடு நுகர சில எளிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
1. துணிமணிகளை நினைத்தபோதெல்லாம் வாங்கிப்போடுவதைக் குறையுங்கள்; தேவைப்படும்போது மட்டுமே வாங்குங்கள்.
2. செயற்கையிழைத் துணிகளையும் போலிப்பகட்டு நகைகளையும் வாங்குவதைத் தவிருங்கள் அல்லது குறைக்க முயலுங்கள்.
3. நல்ல தரமான பொருட்களை வாங்குங்கள். மலிவாகக் கிடைப்பதால் தரத்தில் குறைந்த பொருட்களை வாங்குவதைத் தவிருங்கள்.
4. உள்ளூரில் அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள்.
5. நீங்கள் பல முறை அணியக்கூடிய பொருட்களை மட்டும் வாங்குங்கள்.
6. பல விதமாகப் பொருத்தி அணியக்கூடிய (மிக்ஸ் & மேட்ச்) துணிமணிகளை வாங்குங்கள்.
7. வாங்கிய உடைகளையும் அணிகலன்களையும் கவனமாகப் பராமரியுங்கள்.
8. நல்ல நிலையிலிருக்கும் பழைய துணிகளை நவீனமாக வடிவமையுங்கள்.
9. உடன்பிறப்புகள், உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் துணிகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
10. ஒரே ஒரு சந்தர்ப்பத்திற்கு மட்டும் உங்களுக்குத் தேவைப்படும் ஆடைகளை வாடகைக்குப் பெறுங்கள்.
11. தையல் பிரிந்த/லேசாகக் கிழிந்த உடைகளை உடனே தூக்கிப்போட வேண்டாம். அவற்றைத் தைத்து சரிசெய்யுங்கள்.
12. பழைய/தேவையற்ற ஆடைகளைக் குப்பையில் எறிய வேண்டாம். அவற்றை யாருக்கேனும் நன்கொடையாக வழங்கலாம்.
13. தேவையற்ற ஆடை அணிகளை மறுசுழற்சியோ மேல்சுழற்சியோ செய்யலாம்.
14. தாம் நிலைபேற்றுத்தன்மையுடையவை (ஸஸ்டைனபிள்) என்று சொல்லிக்கொள்ளும் நிறுவனங்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளுங்கள். அவை பச்சையடிக்கவில்லை (க்ரீன்வாஷ் செய்யவில்லை) என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
எந்தப் பொருளை வாங்கினாலும் ஆராய்ந்து முடிவுகளை எடுங்கள், அவசரப்பட்டல்ல!